தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முதல்வர்  ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது அதிமுகவின் கோட்டை கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் நிலையில் கொங்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கை நிரூபித்து காட்ட வேண்டும் என்பதற்காக கொங்கு மண்டலத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமித்து திமுகவின் கோட்டை கொங்கு மண்டலம் என்று மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.

அந்த வகையில் எடப்பாடியின் கோட்டை சேலம் என்று கருதப்படும் நிலையில் சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு பணிகள் குறித்து ஆய்வு செய்வதோடு சில முக்கிய நிர்வாகிகளையும் ரகசியமாக சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முதல் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக தான் தற்போது கொங்கு மண்டலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையில் அதிமுகவே அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலையில் இருக்கும் நிலையில் திமுக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் கொங்கு மண்டலத்தை குறிவைத்துதான் முதல்வர் ஸ்டாலின் தற்போது சுற்று பயணம் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.