நாட்டுக்கோழியின் சுவைக்கு ஈடு இணை இல்லை என்பதால், எவ்வளவு விலை அதிகமானாலும் பலர் அதை விரும்பி வாங்குவார்கள். அப்படிப்பட்ட நாட்டுக்கோழிகள் ஆயிரக்கணக்கில் இலவசமாகக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஓர் அரிய சம்பவம் தெலுங்கானா மாநிலம் ஹன்மகொண்டா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
எல்கதுர்த்தி பகுதிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், திடீரென ஆயிரக்கணக்கான நாட்டுக்கோழிகள் தோன்றியதைக் கண்ட கிராம மக்கள் உற்சாகத்துடன் ஓடினர். யாருக்கும் எதுவும் புரியாத நிலையில், அந்த இடமே ஒரு கோழிப் பிடி சண்டையாக மாறியது. நெடுஞ்சாலையில் இருந்து பருத்தி வயல்கள் வரை கோழிகள் ஓட, அதைப் பிடிக்க பெரியவர் முதல் சிறியவர் வரை ஓடினர்.
சிலர் ஒன்றிரண்டு கோழிகளைப் பிடித்துத் திரும்பிச் செல்ல, இன்னும் சிலர் பைகள் மற்றும் கூடைகளுடன் வந்து டஜன் கணக்கில் கோழிகளை அள்ளிச் சென்றனர். சுமார் இரண்டாயிரம் கோழிகள் வரை இவ்வாறு வெளியேறியிருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் மதிப்பிடுகின்றனர்.
யார் இந்தக் கோழிகளை விட்டது, ஏன் விட்டார்கள் என்று தெரியவில்லை. பண்ணையிலிருந்து கோழிகளை ஏற்றிச் சென்ற டிரக் விபத்துக்குள்ளானதால் இவை வெளியேறியிருக்கலாம் என்றும், அல்லது ஏதேனும் நோய் காரணமாகப் பண்ணை உரிமையாளர்கள் வேண்டுமென்றே விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் பலவிதமான யூகங்கள் எழுந்துள்ளன.
இதனால், கிராமம் முழுவதும் ஒரே நேரத்தில் கோழிக் கறி விருந்து மணம் வீசியபோதும், சிலருக்குக் கோழியின் ஆரோக்கியத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் கோழி மாதிரிகளைச் சேகரித்து, ஏதேனும் நோய் இருக்கிறதா என்று தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
