சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் குமாரசாமி (56) என்பவர் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் உள்ள எழும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயவாணியும் (36) தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் என்றாலும்  தொடக்கத்தில் அவர்களின் வாழ்க்கை நன்றாகவே இருந்தது. எனினும் காலப்போக்கில் மனைவியின் நடத்தையில் குமாரசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டு, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 2 தினங்களுக்கு முன் வழக்கம் போல் ஜெயவாணி கல்லூரிக்கு சென்று, பஸ்சில் இருந்து இறங்கி தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது, பிச்சைக்காரன் வேடத்தில் அவரது கணவர் வந்து வழிமறித்துள்ளார். பின்னர் ஜெயவாணியை தகாத வார்த்தைகளால் திட்டி, கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் மனைவியின் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

மேலும்  பிச்சைக்காரன் வேடத்தில் வந்து தாக்குதலில் ஈடுபட்டது தன் கணவர்தான் என்பதை புரிந்துகொண்ட அவர் அலறியடித்து ஓடினார். இதனையடுத்து பொதுமக்கள் திரண்டு வரவே குமாரசாமி அங்கிருந்து தப்பித்து ஓடினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின் படுகாயமடைந்த ஜெயவாணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக ஜெயவாணி போலீசில் புகார் கொடுத்ததன் பேரில் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.