தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தனது 20 ஆண்டுகால திரைப்பயணத்தில் சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார். தனது 20 வயதில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது, தனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்திய நெருக்கமான காட்சியில் நடிக்குமாறு படத்தின் இயக்குநர் வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்தத் தர்மசங்கடமான சூழலில் அக்காட்சியில் நடிக்கத் தமன்னா திட்டவட்டமாக மறுத்தபோது, படக்குழுவினர் அனைவரின் முன்னிலையிலும் “கதாநாயகியை மாற்றிவிடுங்கள்” என அந்த இயக்குநர் ஆணவத்துடன் கூறியதாகத் தமன்னா வெளிப்படுத்தியுள்ளார்.

இளம் நடிகை என்பதால் தமன்னாவின் தன்னம்பிக்கையைச் குலைக்கும் வகையில் இயக்குநர் அவ்வாறு நடந்துகொண்டாலும், அவர் தனது முடிவில் உறுதியாக நின்றதாகத் தெரிவித்துள்ளார். எத்தகைய விளைவுகளையும் எதிர்கொள்ளும் தைரியத்தை அந்தத் தருணம் தனக்கு அளித்ததாகவும், இறுதியில் அதே இயக்குநர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தமன்னா குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புப் பாடல்களுக்கு சுமார் ஆறு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் அளவிற்கு இன்று உயர்ந்துள்ள அவர், அன்றைய அழுத்தங்களுக்குப் பணியாமல் இருந்ததே தனது வெற்றிக்குக் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இருப்பினும், அந்த இயக்குநர் மற்றும் திரைப்படத்தின் பெயரை அவர் வெளியிடாத நிலையில், ரசிகர்கள் அது எந்தத் திரைப்படமாக இருக்கும் எனச் சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்களை முன்வைத்து வருகின்றனர்.