டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் மக்கள் பணத்தில் கட்டப்பட்டது என்பதாலும் நாட்டின் முதல் குடிமகன் ஜனாதிபதி என்பதாலும் ஜனாதிபதி தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தியது.

அதேசமயம் வருகின்ற 28-ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் வீரசவார்க்கரின் பிறந்தநாள் என்பதும் எதிர் கட்சிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல். நாடாளுமன்றம் அரசியல் சாசன விழுமியங்களுடன் கட்டப்பட்டது. ஈகோ செங்கற்களால் அல்ல என்று கூறியுள்ளார்.