கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 6 ஏற்கனவே தற்கொலை செய்தனர்.இதனால் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றியது. இதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை எவ்வாறு தடை செய்வது என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸ் மூலம் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிழவன் புதூரைச் சேர்ந்த கார் டீலர் சபாநாயகம் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அவர் லட்ச கணக்கில் பணத்தை இழந்ததாக தெரிகிறது. மேலும் பணம் கொடுத்தவர்கள் அவரிடம் இருந்து இரண்டு கார்களையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சபாநாயகம் காந்திபுரம் ஏழாவது வீதியில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார். இதனையடுத்து வாயில் நுரை தள்ளியபடி சபாநாயகம் பிணமாக கிடந்ததை பார்த்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சபாநாயகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து போலீசார் சபாநாயகம் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் 90 லட்சம் வரை இழந்துவிட்டேன். எனது சாவுக்கு நானே காரணம். எனது தாய் தந்தையை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். எனது தங்கை, மைத்துனர் என்னை மன்னித்து விடுங்கள் என எழுதியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.