திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணை வைத்துள்ளார். நேற்று ஜெயக்குமார் வடமதுரை மேற்கு ரத வீதியில் காரை நிறுத்திவிட்டு பண்ணைக்கு சென்றுள்ளார். மதியம் 2 மணி அளவில் திடீரென காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பக்கத்து வீட்டில் இருந்து மின் மோட்டாரை இயக்கி குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் மினி டேங்கர் லாரி மூலம் தண்ணீரை கொண்டு வந்தும் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தீயணைப்பு படை வாகனத்தை எதிர்பார்க்காமல் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்ததால் குடியிருப்பு பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது வெயிலில் நிறுத்தி வைத்திருந்த போது காரின் டேஷ்போர்டு பகுதியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.