உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த பிரியன்ஷா சோனி (36) ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வாழ்ந்து வந்தவர். கடந்த 30ம் தேதி தொடங்கிய வசந்த நவராத்திரி விழாவுக்காக அவரது வீட்டில் சிறப்பு பூஜைகள் நடத்த திட்டமிட்டிருந்தார்.

அந்த நிகழ்வுக்காக தனது கணவரிடம் தேவையான பூஜை பொருட்கள், பழம், பூ, விளக்கு உள்ளிட்டவை வாங்கி வருமாறு கேட்டிருந்தார். கணவரும் அதைச் செய்து, சோனியின் ஆன்மீக உற்சாகத்திற்கு ஆதரவளித்திருந்தார்.

அந்த நாளில் பூஜை செய்ய இருந்தபோது சோனிக்கு மாதவிடாய் வந்தது. இதனால் குடும்பத்தினர், ஆன்மீக மரபின்படி, அவர் பூஜை செய்ய வேண்டாம், விரதம் இருக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினர்.

இந்த நிலைமையால் கடுமையாக மனமுடைந்த சோனி, நவராத்திரி விழாவுக்காக ஒரு வருடமாக ஆவலுடன் காத்திருந்தாலும், அந்த நாளில் கடவுளை வழிபட முடியாத நிலைக்கு வந்ததால் பெரும் மனவலியில் ஆழ்ந்தார். தனது விருப்பம் நிறைவேறாததற்காகவே, கணவன் சமாதானம் செய்தும், சோனி அமைதியாக இருக்க முடியவில்லை.

மனவேதனையில் இருந்த சோனி, கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டார். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியதிலும் மீண்டும் உடல்நிலை மோசமானதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜூஸ் வாங்கி வரும்படி கணவரிடம் கூறிய சில நிமிடங்களில், சோனி இறந்துவிட்டார். “ஒரு வருடமாக நவராத்திரிக்காக காத்திருந்த சோனி, கடைசியாக பூஜை செய்ய முடியாததால் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தார்,” என கணவர் முகேஷ் தனது வேதனையை தெரிவித்தார்.