தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கரங்கள் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கூலி தொழிலாளர். இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் கனகராஜை விரட்டிச் சென்று வெட்டிக் கொன்றனர். அதனை தடுக்க ஓடி வந்த கனகராஜின் தந்தை நடராஜனையும் மர்ம நபர்கள் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் படுகாயமடைந்த நடராஜனை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். குற்றவாளிகளை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

விசாரணையில் கனகராஜின் மனைவி கவிக்குயிலின் முன்னாள் காதலரான வெங்கடேஷ் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து இருவரையும் கொன்றது தெரியவந்தது. திருமணத்திற்கு முன்னரே கவி குயிலுக்கும் வெங்கடேசுக்கும் காதல் இருந்துள்ளது. பெற்றோர் கட்டாயப்படுத்தி தாய் மாமா மகனான கனகராஜுக்கு கவிகுயிலை திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு பிறகும் வெங்கடேஷ் உடன் கவிக்குயில் காதலை தொடர்ந்துள்ளார்.

கனகராஜ் இல்லாத நேரங்களில் வெங்கடேஷ் அவரது வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருப்பதை ஊர்வாசிகள் கவனித்துள்ளனர். அப்படி ஒரு முறை வந்தபோது கனகராஜ் தனது உறவினர்களுடன் சேர்ந்து வெங்கடேஷை கம்பத்தில் கட்டி வைத்து மிளகாய் பொடி தூவி கை மற்றும் முகத்தில் வெட்டியுள்ளார். இதில் வெங்கடேஷின் கைவிரல்கள் துண்டானதோடு, முகத்தில் தழும்பும் விழுந்துள்ளது. இதனால் வெங்கடேஷுக்கு பெண் தர அனைவரும் மறுத்துள்ளனர். அந்த ஆத்திரத்தில் இருந்த வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கனகராஜை வெட்டி கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.