பெங்களூருவில் ஒரு ‘ராபிடோ’ (Rapido) பைக் டாக்ஸி ஓட்டுநர், பெண் பயணி ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சர்ச் ஸ்ட்ரீட்டில் இருந்து தான் தங்கியிருக்கும் பி.ஜி-க்குத் (Paying Guest) திரும்பிக் கொண்டிருந்தபோது, ராபிடோ ஓட்டுநர் பைக்கை ஓட்டிக்கொண்டே தன் கால்களைப் பிடிக்க முயன்றதாக அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் குற்றம் சாட்டியுள்ளார்.
“இது அனைத்தும் மிக விரைவாக நடந்தது. நான் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் மீண்டும் அதே செயலைச் செய்தபோது, நான் ‘அண்ணே என்ன செய்யுறீங்க, செய்யாதீங்க’ என்று கத்தினேன். ஆனாலும் அவர் நிற்கவில்லை,” என்று அந்தப் பெண் தனது பதிவில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
தன்னுடன் அத்துமீறிய ஓட்டுநரைக் கண்டவுடன், அந்தப் பெண் நடுவழியில் பைக்கை நிறுத்தச் சொல்லத் தைரியம் வரவில்லை என்றும், அந்தப் பகுதி தனக்குப் புதியது என்பதால் வழியும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். எப்படியோ, தான் சேர வேண்டிய இடத்திற்குச் சென்று சேர்ந்த பிறகு, அந்தப் பெண் மிகவும் பதற்றத்துடன் இருந்ததைக் கவனித்த அவ்வழியாகச் சென்ற ஒருவர்தான் உதவிக்கு வந்துள்ளார்.
அவர் ஓட்டுநரை மறித்துக் கண்டித்துள்ளார். ஓட்டுநர் மன்னிப்புக் கேட்டபோதும், போகும்போது அந்தப் பெண்ணை நோக்கி விரல் நீட்டி மிரட்டியதாகவும், அதனால் தான் மேலும் பாதுகாப்பற்ற உணர்வுக்கு ஆளானதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை வேறு எந்தப் பெண்ணும் சந்திக்கக் கூடாது என்பதற்காகவே இதை வெளியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் வில்சன் கார்டன் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ராபிடோ நிறுவனம் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
