சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் முக்கியத் தொடராகக் கருதப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், இந்திய ஜூனியர் தேர்வு குழு, வரவிருக்கும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மற்றும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிகளை அறிவித்துள்ளது.
இந்த அணித் தேர்வில், உலகக் கோப்பை மற்றும் அதற்கு முன்னதாக நடைபெறும் பயிற்சி தொடருக்கு இரு வேறு கேப்டன்கள் நியமிக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. சனிக்கிழமை கூடிய பிசிசிஐ ஜூனியர் தேர்வு குழு, தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கும், ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள ஐசிசி U19 உலகக் கோப்பைக்கும் இந்திய அணிகளை அறிவித்தது.
பொதுவாக, பெரிய தொடருக்கு முன்பாக நடைபெறும் பயிற்சி தொடரிலும் அதே கேப்டன் அணியை வழிநடத்துவது வழக்கம். ஆனால் இம்முறை, வீரர்களின் பணிச்சுமை, காய அபாயம் மற்றும் தலைமைத்துவத் திறன்களை சோதிக்கும் நோக்கில், இரு தொடர்களுக்கும் இரு கேப்டன்களை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
🚨 News 🚨
India’s U19 squad for South Africa tour and ICC Men’s U19 World Cup announced.
Details▶️https://t.co/z21VRlpvjg#U19WorldCup pic.twitter.com/bL8pkT5Ca2
— BCCI (@BCCI) December 27, 2025
தென்னாப்பிரிக்க தொடருக்கு வைபவ் சூர்யவன்சி கேப்டன்
உலகக் கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக, இந்திய U19 அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக பீகாரைச் சேர்ந்த இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்ட வைபவ் சூர்யவன்சி, 13 வயதிலேயே ரஞ்சி கோப்பையில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே இந்திய U19 அணியை வெளிநாட்டு மண்ணில் வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவரது ஆட்டமும் தலைமைத்துவமும் அதிக கவனம் பெறுகிறது.
உலகக் கோப்பைக்கு ஆயுஷ் மத்ரே கேப்டன்
ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள ஐசிசி U19 உலகக் கோப்பை தொடரில், இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணைக் கேப்டனாக விஹான் மல்ஹோத்ரா பொறுப்பேற்கிறார். கடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழந்த இந்திய அணி, இம்முறை மீண்டும் உலகக் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்க உள்ளது.
இந்திய U19 உலகக் கோப்பை அணி
ஆயுஷ் மத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (துணைக் கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ. படேல், முகமது எனான், ஹெனில் படேல், டி. தீபேஷ், கிஷன் குமார் சிங், உத்தவ் மோகன்.
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய U19 அணி
வைபவ் சூர்யவன்ஷி (கேப்டன்), ஆரோன் ஜார்ஜ் (துணைக் கேப்டன்), வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ. படேல், முகமது எனான், ஹெனில் படேல், டி. தீபேஷ், கிஷன் குமார் சிங், உத்தவ் மோகன், யுவராஜ் கோஹில், ராகுல் குமார்.
