சென்னையில் இன்று நடைபெற்ற காலை உணவுத் திட்ட விழாவில் பங்கேற்ற பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மாணவர்களுடன் அமர்ந்து உணவுண்டு பேசினார். தமிழக அரசின் திட்டம் மாணவர்களின் சத்தான வளர்ச்சிக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையான உணவை வழங்குவது போன்ற நுண்ணறிவு நடைமுறைகள் அரசின் நிர்வாக திறனை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். “இது அரசின் திறமையை பிரதிபலிக்கிறது, பஞ்சாபிலும் இதைப் போல செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்” என அவர் உறுதியளித்தார்.
மேலும், நாளை நடைபெற உள்ள பஞ்சாப் அமைச்சரவை கூட்டத்தில், காலை உணவுத் திட்டம் தொடர்பாக உரிய முன்மொழிவுகள் கொண்டு செல்லப்படும் என்றும், தமிழகத்தின் மாதிரியை பின்பற்றி மாணவர்களுக்கு பயனுள்ள திட்டம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் பகவந்த் மான் தெரிவித்தார். தமிழகத்தின் கல்வி மற்றும் உணவுத் திட்டங்களை பாராட்டிய அவர், இது நாடு முழுவதும் விரிவடைய வேண்டிய திட்டம் என வர்ணித்தார்.
