அயர்லாந்தை சேர்ந்த இயன் மோர்கன் அயர்லாந்து அணியில் அறிமுகமாகி பின்னர் இங்கிலாந்துக்காக ஆடிவந்தார். இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றதில்லை என்ற ஒரு வருத்தம் அந்த அணிக்கு பல ஆண்டுகளாக இருந்துவந்தது.

அந்த குறையை தீர்த்துவைத்தவர் இயன் மோர்கன். 2015 உலக கோப்பையில் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறிய இங்கிலாந்து அணியை, அதன்பின்னர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அச்சமற்ற கிரிக்கெட் ஆடி அசாத்திய ஸ்கோர்களை அடிக்கவல்ல மற்றும் எதிரணிகளை அடித்து துவம்சம்செய்து வெற்றிகளை வசப்படுத்தக்கூடிய வலுவான அணியாக கட்டமைத்தார் இயன் மோர்கன்.

2015 உலக கோப்பை தோல்விக்கு பின்னரே, 2019 உலக கோப்பையை மனதில் கொண்டு, இடைப்பட்ட 4 ஆண்டுகளில் வலுவான அணியை  கட்டமைத்தார் இயன் மோர்கன். பட்லர், பேர்ஸ்டோ, ராய் ஆகிய வீரர்களுடன் தானும் அதிரடியாக பேட்டிங் ஆடி, 400 என்ற ஸ்கோரை ஒருநாள் கிரிக்கெட்டில் அசால்ட்டாக்கியவர் இயன் மோர்கன்.

பெரும் எதிர்பார்ப்புடன் 2019 உலக கோப்பையில் களமிறங்கிய இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் பல்லாண்டு கால உலக கோப்பை கனவை நனவாக்கினார் மோர்கன். இவர் தற்போது அனைத்து வகை கிரிக்க்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது அவரின் ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.