18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது.
இதனைத் தொடர்ந்து வீரர்கள் பெங்களூரு நகரில் ஊர்வலம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சின்னசாமி மைதானத்திற்கு வந்த கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்களின் கூட்டம் அலை மோதுவதால் பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சின்னசாமி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் நிலையில் வெளியே கூட்ட நெரிசல் அலை மோதுகிறது. முதலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த கூட்டம் நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஐ.பி.எல் வெற்றிப் பேரணியில் உயிரிழந்தோருக்கு ஆர்.சி.பி அணி இரங்கல் தெரிவித்துள்ளது. துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். அனைவரின் பாதுகாப்பும் நல்வாழ்வும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது.
துயரமான உயிரிழப்புக்கு ஆர்.சி.பி அணி இரங்கல் தெரிவிக்கிறது. நிலைமை குறித்து உடனடியாக அறிந்தவுடன் நாங்கள் எங்கள் திட்டத்தை உடனடியாக பாதியிலேயே நிறுத்திக் கொண்டோம் என ஆர்.சி.பி அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
