சென்னையை அடுத்த ஆலந்தூரில், கணவரை இழந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வேம்புலி அந்தப் பெண்ணுக்கு மொபைலில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதோடு, அவர் தனியாக இருப்பதை அறிந்து இரவு நேரத்தில் வீட்டுக்குள் சென்று பாலியல் ரீதியாக அச்சுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, தமிழக வெற்றிக் கழகத் தலைமை வேம்புலி மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியின் தலைமை உத்தரவின் பேரில், ஆலந்தூர் வடக்கு பகுதி கழகச் செயலாளராக பொறுப்பு வகித்த திரு. வேம்புலி அவர்கள், கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு முரணான மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், உடனடியாக (10.06.2026 முதல்) கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ECR P. சரவணன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார், மேலும் இனி அவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.