கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடத்திய தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தைச் சுற்றிய வழக்குகள் தொடர்பாக மொத்தம் 5 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 13ஆம் தேதி கூட்ட நெரிசல் விபத்து குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் பேரில், ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று கரூர் வந்துள்ளனர். குழுவில் ஏ.டி.எஸ்.பி. முகேஷ்குமார், டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
கரூருக்கு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளனர். அவர்கள், சம்பவம் தொடர்பான வழக்கின் ஆவணங்களை பெற்றுக்கொண்டு, உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சி.பி.ஐ. குழுவினர் இன்று அல்லது நாளை விசாரணையை அதிகாரப்பூர்வமாக தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
