மதுரை பாரபத்தியில் நடைபெற்ற தமிழகம் வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாட்டில் நடந்த பரபரப்பான சம்பவம் தற்போது புதிய பரிணாமத்தை எடுத்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தவெக தொண்டர் சரத்குமார், நடிகர் விஜய் தலைமையிலான மாநாட்டில் கலந்து கொண்டபோது, அவரை பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் தூக்கி வீசியதாகக் கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரத்குமாருடன் அவரது தாய் சந்தோசம் உள்ளிட்டோர் இன்று நேரில் சென்று காவல்துறையிடம் புகார் மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த 21ஆம் தேதி நடந்த மாநில மாநாட்டில், பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில், விஜய் ‘ரேம்ப் வாக்’ செய்தபோது பாதுகாப்பு கருதி மேடையைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் சிலர் அதை மீறி மேடையினுள் நுழைய முயன்றதால், பவுன்சர்கள் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.

இந்த முயற்சியில் பெரம்பலூரை சேர்ந்த சரத்குமார் என்ற தொண்டர், மேடையின் அருகில் விஜயை காண விரும்பிய போதே, பவுன்சர்கள் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வீசியதாக புகார் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதையும் அவர் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த புகாரில் ”தவெக மாநாட்டில் கலந்து கொண்டு நடிகர் விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு அவரை நெருங்கிய என்னை விஜயின் பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) தூக்கி வீசினர். இதனால் எனக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு உள்ளன. எனவே என்னை தூக்கி வீசிய பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தவெக தலைவர் நடிகர் விஜயின் பவுன்சர்கள் மீது அதே கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்திருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், தமிழக வெற்றிக் கழகம் வட்டாரத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.