சென்னை: தலைசுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிகிச்சைக்கு பின்னர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் வீடு திரும்பிய நிலையில், நலமுடன் இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், முழுமையாக நலமடைய அவர் மேலும் 3 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர் குழு பரிந்துரைத்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து முதலில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பரிசோதனைகளுக்குள் உள்ளடக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், இதயத் துடிப்பில் சிறிய மாற்றம் ஏற்பட்டிருந்ததாகவும், அதனால் தலைசுற்றல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் இருந்தபோதும், முதல்வர் ஸ்டாலின் தனது அரசு பணிகளை வழக்கம்போலவே தொடர்ந்துள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதோடு, திமுக மண்டல பொறுப்பாளர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், 7 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை அதிகாரப்பூர்வமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழு, ஸ்டாலின் முழுமையாக நலமாக உள்ளதாகவும், இன்னும் 3 நாட்கள் ஓய்வெடுத்த பிறகு அரசு பணிகளை தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதற்கமைய, முதல்வரின் அடுத்த அரசு நிகழ்ச்சிகள் விரைவில் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
