பாமக-வின் முன்னாள் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க முன்னாள் தலைவருமான மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, ‘ஜெ.குரு பட்டாளி மக்கள் கட்சி’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
அதாவது பாட்டாளி மக்கள் கட்சியின் முதுகெலும்பாகத் திகழ்ந்த காடுவெட்டி குருவின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினருக்கும் பாமக தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. இந்நிலையில், அவரது மகள் விருதாம்பிகை தற்போது அரசியல் களத்தில் முறைப்படி குதித்துள்ளார்.
தன்னுடைய புதிய கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள அவர், இன்று (ஜனவரி 10) முறைப்படி கட்சியைத் தொடங்கி வைத்தார். விழாவில் கட்சியின் புதிய கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். நீலம் மற்றும் மஞ்சள் நிறப் பின்னணியில், காடுவெட்டி குருவின் உருவம் மற்றும் அக்கினி கலசம் பொறிக்கப்பட்ட கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் இக்கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வன்னியர் சமூக வாக்குகளைப் பிரிக்கும் வகையில் இப்புதிய கட்சி அமைந்துள்ளதால், இது எதிர்வரும் தேர்தல்களில் பாமக-வுக்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
