பாஜக மூத்த தலைவர் விஜய் மல்ஹோத்ரா (93) உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (செப்.30) காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

டெல்லியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். பாஜகவின் வளர்ச்சிக்காக தன்னலமற்ற சேவையாற்றிய அவர், தலைநகரின் அரசியல் களத்தில் மிக முக்கியமான முகமாக கருதப்பட்டார். அவரது மறைவு, பாஜக கட்சிக்கும், டெல்லி அரசியலுக்கும் பெரும் இழப்பாகக் கூறப்படுகிறது.

மல்ஹோத்ராவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் குறிப்பில், “பாஜகவின் வளர்ச்சிக்காக முக்கிய பங்காற்றிய விஜய் மல்ஹோத்ராவின் மறைவு என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்துகிறது. அவர் நாட்டிற்கு அளித்த சேவைகள் என்றும் நினைவில் நிலைத்து நிற்கும்” என குறிப்பிட்டுள்ளார். மூத்த தலைவரின் மறைவால், டெல்லி முழுவதும் அரசியல் வட்டாரங்களில் சோகமும் இரங்கலுமாக நிலவி வருகிறது.