இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்த கூலித்தொழிலாளி ஒருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணும், அந்த வாலிபரும் இன்ஸ்டாகிராம் செயலி வழியாக அறிமுகமாகிப் பழகி வந்துள்ளனர். இவர்களின் நட்பு நாளடைவில் நெருக்கமாக மாறியதை அடுத்து, கடந்த 20-ஆம் தேதி இருவரும் பெரியபாளையத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அந்த வாலிபர், பெண்ணுக்குத் தெரியாமல் தங்களின் நெருக்கமான காட்சிகளைத் தனது செல்போனில் ஆபாச வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த ஆபாச வீடியோவைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி, அந்தப் பெண்ணை வாலிபர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இதுகுறித்து காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை நடத்திப் பெண்ணை மிரட்டிய கூலித்தொழிலாளியைக் கைது செய்து, அவரிடமிருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
