தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

சென்னையிலிருந்து தனியார் விமானத்தில் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் சென்றார். தொடர்ந்து, மதியம் 3 மணியளவில் திருவாரூர் மாவட்டத்திற்குள் வந்த அவர், தெற்கு வீதியில் மக்கள் சந்திப்பில் பங்கேற்றார்.

விஜயின் வருகையை முன்னிட்டு, தவெக நிர்வாகிகள் திருவாரூரில் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில், கிரேன் மூலம் ஒரு பெரிய மாலையை ஏந்தி விஜய்க்கு அணிவிக்கப்பட்டது. தனது பிரசார வாகனத்தில் நின்றபடியே விஜய் அந்த மாலையை ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக கிரேன் பயன்படுத்தப்பட்டதாக கூறி, திருவாரூர் நகர காவல் நிலையத்தில் நால்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஜே.சி.பி. உரிமையாளர் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.