தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில் திரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு பிரியா வாரியர், சிம்ரன், பிரசன்னா உள்ளிட்டா பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் உலக அளவில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் சாதனை புரிந்ததாக கூறப்படும் நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா சமீபத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியதாக படக்குழு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமீபகாலமாகவே தன்னுடைய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்துபவர்கள் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகர் அஜித் படத்தின் மீதும் அவர் வழக்கு தொடர்ந்தது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரது வழக்கில் நீதிமன்ற முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இசைஞானி இளையராஜா தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த படத்தில் இடம்பெற்ற இளமை இதோ இதோ, ஒத்த ரூபாய் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி உள்ளிட்ட பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.