தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி விடுதலை செய்யப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மீதான வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2011 தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக கொடுத்த வழக்கில் இருந்து முக அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ஆம் தேதி இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக தொடர்ந்த வழக்கில் 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முக அழகிரி உள்ளிட்ட 17 பேர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் நீதிபதி முத்துலட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ளார். 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு மேலூர் அருகே வல்லடிக்காரர் கோவிலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது. பண பட்டுவாடாவை வீடியோ எடுத்த அப்போதைய மேலூர் தாசில்தார் காளிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து முக அழகிரி, மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.