தமிழக முதல்வர் விஜய் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் இன்று (25.05.2026) நடந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தும். அதன்படி குறு விவசாயிகள் ரூ.50,000 வரை பெற்ற பயிர்க்கடன் முழுவதும் (100%) தள்ளுபடி செய்யப்படுகிறது. கடன் தொகை அதிகரிக்க அதிகரிக்க தள்ளுபடித் தொகை அதிகபட்சமாக ரூ.40,000 முதல் குறைந்தபட்சம் ரூ.5,000 வரை படிப்படியாகக் குறைக்கப்படும்.

சிறு விவசாயிகள் ரூ.50,000 வரை பெற்ற கடனில் 50% தள்ளுபடி செய்யப்படுகிறது. அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.5,000 வரை சலுகை வழங்கப்படும். இதர பெரு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற மற்ற பெரிய விவசாயிகளுக்குப் பொதுவான சலுகையாக தலா ரூ.5,000 தள்ளுபடி செய்யப்படும்.

ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி, தள்ளுபடித் தொகையை 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு அரசே செலுத்திவிடும். இத்திட்டத்தால் தமிழகத்தைச் சேர்ந்த 14,22,555 விவசாயிகள் பலனடைவர். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் சாகுபடிப் பருவத்திற்குப் புதிய கடன்களைப் பெற இந்த அறிவிப்பு விவசாயிகளுக்குப் பேருதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.