தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேசில் கலந்து கொண்டு வருகிறார். நடிகர் அஜித் குமார் தன்னுடைய காரில் தமிழ்நாட்டு விளையாட்டு ஆணையத்தின் லோகோவான SDAT பயன்படுத்தி வரும் நிலையில் இதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று நன்றி தெரிவித்திருந்தார்.
அதாவது வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று சர்வதேச அளவில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த நடிகர் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்ததோடு தமிழக விளையாட்டு துறை ஆணையத்தின் லோகவை பயன்படுத்தியதற்காகவும் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் தமிழ்நாட்டு விளையாட்டு ஆணையத்தின் லோகோவை பயன்படுத்துவதற்கான காரணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்தார். இது பற்றி அவர் இந்தியா டுடேவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது, தமிழக அரசு சென்னையில் கார் பந்தயத்தை நடத்தியது. இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் கார் ரேசிங்கை தமிழக அரசு சென்னையில் நடத்தியது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.
இது மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது. ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகனாக அதற்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழக அரசிடம் முறையான அனுமதி பெற்று இந்த லோகோவை நான் பயன்படுத்தி வருகிறேன். இதற்காக தமிழக அரசு சார்பில் எனக்கு எந்தவிதமான ஸ்பான்சர் ஷிப்பும் செய்யவில்லை. நான் யாரிடமும் ஸ்பான்சர் ஷிப் கேட்பதும் கிடையாது.
மேலும் இந்த விளையாட்டுக்கு மட்டுமல்ல பல விளையாட்டுகளுக்கும் பல நல்ல விஷயங்களுக்கும் நான் SDAT லோகோவை பயன்படுத்தி வருகிறேன் என்று கூறினார். அவரது இந்த பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
