தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்களை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) வெளியிட்டுள்ளார். வாக்குச்சாவடி மையங்களுக்குள் போலீசார் நுழைவதற்கு அவர் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளார். இது குறித்து தமிழக டிஜிபி விடுத்துள்ள உத்தரவின் முக்கிய விவரங்கள் வருமாறு,
தேர்தல் பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் எந்தச் சூழலிலும், எக்காரணம் கொண்டும் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக்கூடாது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர் (Presiding Officer) அழைத்தால் அல்லது அவரது முறையான அனுமதி இருந்தால் மட்டுமே போலீசார் உள்ளே செல்ல வேண்டும். காவலர்கள் அனைவரும் வாக்குச்சாவடியின் வெளிக்கதவு அருகிலேயே நின்று தங்களது பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
இந்த உத்தரவுகள் குறித்து மண்டல ரோந்து பிரிவினர் மற்றும் வயர்லெஸ் கருவிகள் மூலம் களத்தில் உள்ள காவலர்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளில் இருந்து ஏதேனும் விலகல் அல்லது பணியில் கவனக்குறைவு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்துள்ளார்.
மண்டல ஐ.ஜி-க்கள் (IG) மற்றும் சரக டி.ஐ.ஜி-க்கள் (DIG) தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நேர்மையாகவும், எவ்வித புகார்களுக்கு இடமளிக்காமலும் நடப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
