இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் ஐந்து அம்ச தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்து அம்சம் என்பது பரிசோதனை, தடுப்பூசி மற்றும் தொடர்பை கண்டறிதல் ஆகியவற்றை குறிக்கும்.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என தகவல்களும் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறன. இதுகுறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களில் உண்மை இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.