திருவள்ளூர் மாவட்டம் பெட்டிக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்குள் புகுந்த மர்ம கும்பல், சிவகுமார் என்ற நபரை கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெட்டிக்குப்பத்தில் இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசித்து வந்தவர் சிவகுமார். இன்று ஒரு கும்பல் திடீரென முகாமிற்குள் நுழைந்து சிவகுமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலையாளிகள் சிவகுமாரை வெட்டிக் கொன்றதோடு மட்டுமல்லாமல், அவரது வீட்டிற்கும் தீ வைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொடூரக் கொலை தொடர்பாக திருவள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், தற்போது 6 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அதன்படி தீபக் ஆகாஷ்,
புஷ்பா, நிஷா உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கைதானவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சிலரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க முகாம் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை காவல்துறையினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது