தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகால ஆட்சியைத் தீர்மானிக்கப் போகும் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடக்கும் என்ற பல மாத காலக் காத்திருப்புக்கும், யூகங்களுக்கும் இன்று அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் சற்றுமுன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்திற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அதிரடியாக அறிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

​இந்த அறிவிப்பின்படி, ஏப்ரல் 23-ம் தேதி மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய உள்ள நிலையில், பதிவான வாக்குகள் அனைத்தும் மே 04-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கோடை வெயில் கொளுத்தத் தொடங்கும் நேரத்தில், அதே வேகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரங்களும் சூடுபிடிக்க உள்ளன. “வாக்காளர்களே தயாராக இருங்க” எனத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், திமுக, அதிமுக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை மின்னல் வேகத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளன.