வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக முஸ்லிம் மக்கள் கழகத்தின் தலைவர் ஜைனுதீன் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விஜய் தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜன நாயகன்’  முழு படமும்  இணையத்தில் கசிந்துள்ளது. இதில் இஸ்லாமியர்களைத் தவறாகச் சித்தரிக்கும் வகையில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக முஸ்லிம் மக்கள் கழகத் தலைவர் ஜைனுதீன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுபான்மையினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இக்காட்சிகள் அமைந்திருப்பதைக் கண்டித்து, தவெக-வுக்கு அளித்து வந்த அரசியல் ஆதரவை மீட்டுக் கொள்வதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜைனுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தவெக-வின் செயல்பாடுகள் மற்றும் திரைப்படக் காட்சிகள் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்துகின்றன. எனவே, வரும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என முஸ்லிம் மக்கள் கழகம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறிஉள்ளார்.

கூட்டணி மற்றும் ஆதரவு திரட்டும் பணிகளில் தவெக தீவிரம் காட்டி வரும் வேளையில், ஒரு முக்கிய சமூக அமைப்பின் இந்த ஆதரவு விலகல் விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. மேலும் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தத் திடீர் திருப்பம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.