மும்பை: ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் இயக்குநர்களாக இருந்த நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபர் தீபக் கோத்தாரி, 2015 முதல் 2023 காலக்கட்டத்தில் அந்த நிறுவனத்திற்கு ரூ.60.48 கோடி அளித்ததாகவும், அந்தத் தொகையை இருவரும் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அதிக வட்டி செலுத்துவதைத் தவிர்க்க அந்தப் பணத்தை ‘முதலீடு’ என பதிவு செய்ததாகவும், தொகை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டதாகவும் கோத்தாரி தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டில் ஷில்பா ஷெட்டி இயக்குநர் பதவியில் இருந்து விலகியபோதும், அதன் பிறகு நிறுவனத்துக்கு எதிராக ரூ.1.28 கோடி திவால் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதுகுறித்து தனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கோத்தாரி புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து, மும்பை ஜூஹு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த வழக்கை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.