தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது தனக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரை நேரில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, தமக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ-க்களின் பட்டியலைச் சமர்ப்பித்த விஜய், தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க அதிகாரப்பூர்வமாக உரிமை கோரினார். ஏற்கனவே விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் 118 என்ற பெரும்பான்மை பலத்தை தவெக எட்டியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளதைத் தொடர்ந்து, இன்னும் சில தினங்களில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதனால் தவெக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர்.
