பெங்களூரு செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் நாளை முழு அடைப்பு என்பதால் தமிழக பேருந்துகள் நாளை எல்லையிலே நிறுத்தப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக பேருந்து எல்லை வரை மட்டுமே இயங்கும் என்று  போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. காவிரி நீர் திறப்பு உத்தரவை கண்டித்து நாளை கர்நாடகா முழுவதும் பந்த் நடக்க உள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரு மாநில எல்லைப் பகுதியில் சூழ்நிலையை பொறுத்து பேருந்து சேவை தொடரும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் இயக்கப்படக்கூடிய அரசு பேருந்துகள் தமிழகம் மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் கர்நாடகா மாநிலத்திற்கும் தமிழக அரசு சார்பில் நாள்தோறும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு உள்ளிட்ட முக்கியமான நகரங்களுக்கு அரசு பேருந்துகள் சென்னை மற்றும் வேலூர் மாவட்டம், அதே போல கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் இருந்து இயக்கப் பட்டு வருகிறது. இந்த சூழலில் நாளை கர்நாடக மாநிலத்தில் ‘பந்த் போராட்டம்’, அதாவது தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் நாளை பந்த் போராட்டம் மற்றும் ஊர்வலம் போன்ற போராட்டங்களுக்கு திட்டமிட்டுள்ளார்கள்.. எனவே இன்று நள்ளிரவு முதல் பெங்களூர் நகரத்தில் 144 தடை உத்தரவு போடப்படுகிறது.

இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் இருந்து இயக்கப்படக்கூடிய அரசு பேருந்துகள் நாளை தமிழக எல்லையான ஓசூர் அருகே இருக்கும் அத்திப்பள்ளி வரை தமிழக அரசு பேருந்துகளை இயக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நிலைமையை பொருத்து பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஓட்டுனர் மற்றும் நடத்தினர்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். எனவே தமிழக எல்லையான ஓசூர் அருகே இருக்கக்கூடிய அத்திப்பள்ளி வரை தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இதுபோன்ற போராட்டம் நடைபெற்று வரக்கூடிய காரணத்தால் நிலமை கண்காணித்து இரு மாநிலத்திற்குமான சேவை இயக்குவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அந்த சூழலுக்கு ஏற்ப போக்குவரத்து துறை ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல் செய்து பேருந்து சேவை இயக்குவதற்கான நடவடிக்கை திட்டமிட்டு இருப்பதாகவும், இன்று நள்ளிரவு மற்றும் நாளை இந்த 2 நாட்களில் முழுமையாக கண்காணித்து பேருந்து சேவை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.