தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சார நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் கரூர் மாவட்டத்திலும் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள் குழந்தைகள் என கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை விசாரணைக்காக அமைத்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவை விசாரணைக்காக நியமித்தது.

இது தொடர்பாக தமிழக வெற்றி கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதித்தது. அதே நேரத்தில் தமிழக அரசு நியமித்த அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கும் தடை விதித்தது. அவர்களின் விசாரணை அறிக்கைகளை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு சிபிஐ விசாரணைக்கு அந்த வழக்கை மாற்றியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிபிஐ அதிகாரிகள் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சமீபத்தில் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோரிடம் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய கரூர் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தற்போது தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை சரியான பாதையில் சென்றதால் அதற்கும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணைக்கும் விதிக்கப்பட்ட தடைகளை நீக்க வேண்டும் எனவும் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.