கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவுள்ள அரசுப் பணி நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று ஒரு முக்கிய இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தப் பணி நியமனமானது தற்காலிகமாக  மட்டுமே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அரசுப் பணி நியமனம் என்பது நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அரசின் இந்த முடிவை எதிர்த்து நாதக மற்றும் மஜக நிர்வாகிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கினை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மேற்கண்ட இடைக்காலக் கட்டுப்பாடுகளை விதித்ததோடு, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தையும் எதிர்மனுதாரராக சேர்த்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.