தமிழக வெற்றிச் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தேர்தல் பரப்புரை பயணத்தின் போது, இன்று தூத்துக்குடியில் பின்தொடர்ந்து வந்த பைக்குகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பகுதியில் இன்று நடைபெற்ற பரப்புரை பயணத்தின் போது, விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகச் சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற ஒரு பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தது.

 

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத பின்னால் வந்த மற்ற பைக்குகளும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
சமீபகாலமாக விஜய்யின் பரப்புரை பயணங்களில் இதுபோன்ற பின்தொடரும் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.

இன்றைய விபத்தின் போது, வழக்கம்போலவே விஜய்யின் வாகனம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து சென்றது அப்பகுதியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனம் நிறுத்தப்படவில்லையா அல்லது விபத்து குறித்து கவனிக்கப்படவில்லையா என்பது குறித்து கட்சித் தரப்பில் முறையான விளக்கம் ஏதும் இதுவரை அளிக்கப்படவில்லை.