தமிழக அரசியலில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் 35 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் காலத்திற்குப் பிறகு 1987-லும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-லும் அதிமுக சந்தித்த பிளவு போன்றதொரு சூழல் தற்போது மீண்டும் உருவாகியுள்ளது. அதிமுகவின் மொத்தமுள்ள 47 சட்டமன்ற உறுப்பினர்களில், மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் (35 பேர்) தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளதால், அக்கட்சி அதிகாரப்பூர்வமாக இரண்டாக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சட்டவிதிகளின்படி, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்து சென்றால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. அந்த 35 உறுப்பினர்களே “உண்மையான அதிமுக” எனக் கருதப்படவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்கள் பதவியை இழக்காமல், தவெக ஆட்சியமைக்கப் பலம் சேர்க்க முடியும்.
ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் 118 என்ற மேஜிக் எண்ணை எட்டிவிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 35 அதிமுக உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது விஜய்யின் பலத்தை சட்டப்பேரவையில் அசுர வேகத்தில் உயர்த்தியுள்ளது.
இந்த 35 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களையும் ஆளுநரிடம் சமர்ப்பித்து, ஒரு வலுவான அரசாங்கத்தை அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதனால் தமிழக அரசியலில் கடந்த சில மணி நேரங்களாகப் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
