உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் நீதிபதியை நோக்கி காலணியை வீச முயற்சி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து கிடைக்கும் தகவலின்படி, விஷ்ணு சிலை புதுப்பிப்பு தொடர்பான வழக்கில், நீதிபதி பி.ஆர். கவாய் கருத்து வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த வழக்கறிஞர், “சனாதனத்தை அவமதிப்பதா?” என கூச்சலிட்டபடி, அவரை நோக்கி காலணியை வீச முயன்றுள்ளார். இது அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்களால் உடனடியாக தடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பின்னர் கருத்து வெளியிட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “இத்தகைய சம்பவங்கள் என்னை பாதிக்காது. நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறவனாக இருக்கிறேன்,”
என கூறியுள்ளார். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்திலேயே நடந்ததால், பாதுகாப்பு தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன. சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.
