ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அருந்ததியினர் சமூகம் குறித்து சர்ச்சையான முறையில் பேசினார். இதனால் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா வாக்கு சேகரிக்க சென்ற போது கூட அருந்ததியர் பற்றி தவறாக பேசிவிட்டு எதற்காக வாக்கு சேகரிக்க வருகிறீர்கள் என்று அவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

இந்நிலையில் அருந்ததியினர் சமூகம் குறித்து தவறாக பேசியதாக சீமான் மீது சமூக நீதி மக்கள் கட்சி புகார் கொடுத்துள்ளது. இந்த புகாரின் பெயரில் ஈரோடு கிழக்கில் தேர்தல் நடத்தும் அலுவலர்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் அனுப்பப்பட்ட 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்காவிட்டால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வேட்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.