சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 118.19 கிலோ மீட்டர் தூரத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை ஊதா வழிதடத்திலும், கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரை காவி வழித்தடத்திலும், மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை சிவப்பு வழிதடத்திலும் 3 வழித்தடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு முதல் கட்டமாக மாதவரம் பால் பண்ணை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை வரை 1.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்பிறகு சமீபத்தில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை 1.226 கிலோமீட்டர் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழித்தடத்தில் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதனையடுத்து கெல்லீஸ் முதல் தரமணி வரை‌ 8 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. வழக்கமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படும் இயந்திரங்களுக்கு பெயர் வைப்பது வழக்கம்.

அதன்படி மெட்ரோ ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படும் தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த மலைகள் மற்றும் ஆறுகளின் பெயர்கள் சூட்டப்படுகிறது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு மாதவரம் பால் பண்ணை முதல் மாதவரம் ஹை ரோடு வரை நடைபெற்று வரும் சுரங்கப் பணிகளில் 2 இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களுக்கு நீலகிரி மற்றும் பொதிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த 16-ஆம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையார் சந்திப்பு வரை சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கிய நிலையில் அதில் பயன்படுத்தப்படும் இயந்திரத்திற்கு காவேரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதே பகுதியில் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கப்படும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் இயந்திரத்திற்கு அடையாறு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாதவரம் பால் பண்ணை முதல் வேணுகோபால் நகர் வரை சுரங்கம் தோன்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 2 மெஷின்களுக்கு ஆனைமலை மற்றும் சேர்வராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கிரீன்வேஸ் சாலை முதல் மந்தவெளி வரை நடைபெறும் சுரங்கப் பணியில் பயன்படுத்தப்படும் 2 இயந்திரங்களுக்கு நொய்யல் மற்றும் வைகை என்றும், அயனாவரம் முதல் பெரம்பூர் வரை நடைபெறும் சுரங்கப் பணிகளில் பயன்படுத்தப்படும் 2 மிஷின்களுக்கு கல்வராயன் மற்றும் மேலகிரி என்றும் சேத்துப்பட்டு முதல் ஸ்டெர்லிங் ரோடு, கே எம் சி வரை நடைபெறும் சுரங்கப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 4 எந்திரங்களுக்கு தாமிரபரணி, பவானி, பாலாறு, சிறுவாணி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அயனாவரம் முதல் ஓட்டேரி வரை நடைபெறும் சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இயந்திரத்திற்கு கொல்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.