நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன் வெள்ளிக்கிழமை சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானதைத் தொடர்ந்து, அந்த மாநில ஆளுநர் பதவி காலியாகியுள்ளது. இதனை அடுத்து, மணிப்பூர் ஆளுநராக பணியாற்றி வரும் அஜய் குமார் பல்லாவுக்கு, நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிக்கையில், “இந்நிலையில், நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் மறைவைத் தொடர்ந்து, இந்தியக் குடியரசுத் தலைவர்,  திரு. அஜய் குமார் பல்லாவை, அவரது சொந்த கடமைகளுடன் கூடுதலாக, நாகாலாந்து ஆளுநரின் பணிகளையும் நிறைவேற்ற நியமிக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் குமார் பல்லா, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியாகவும், நிர்வாக அனுபவம் வாய்ந்தவராகவும் உள்ளவர். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் சிக்கலான சூழ்நிலைகளில், இரு மாநிலங்களிலும் அவருக்கான ஆளுநர் பொறுப்புகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.

மறைந்த இல. கணேசன், தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவால் அரசியல் மற்றும் நிர்வாக தரப்புகளில் துக்கம் ஏற்பட்டுள்ளது. புதிய ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அஜய் குமார் பல்லா, இரண்டு மாநிலங்களிலும் மக்களின் நலனுக்காக பணி ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.