இலங்கைக்கு சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்த முயன்றதாக, இந்து மக்கள் கட்சியின் நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் ஆனந்தராஜ் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் பெரும் அரசியலாக மாறியுள்ள சூழலில், ஒரு அரசியல் கட்சி நிர்வாகியே இதில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஜாபர் சாதிக் தொடர்பான போதைப்பொருள் விவகாரத்தை இந்து மக்கள் கட்சி கடுமையாகக் கையில் எடுத்து திமுகவை விமர்சித்து வந்தது. இந்நிலையில், தற்போது தங்கள் கட்சி நிர்வாகியே போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ளதால் இந்து மக்கள் கட்சி தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட திமுக, “மற்றவர்களை விமர்சித்தவர்கள் இப்போது எங்கே போனார்கள்?” எனக் கேள்வியெழுப்பி சமூக வலைதளங்களில் இந்த விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்து வருகிறது.
