இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் களத்தின் நன்மதிப்பைப் பெற்றவருமான ஆர்.நல்லக்கண்ணு (100), திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, வீட்டில் ஓய்வெடுத்து வரும் நல்லக்கண்ணுவுக்கு, கடந்த சில நாட்களாக அவ்வப்போது காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. இதற்காக அவர் அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு அவருக்கு மீண்டும் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தற்போது உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை முதல்வர் தலைமையிலான மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், நல்லக்கண்ணுவின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருக்குத் தேவையான தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரது உடல்நிலை குறித்து தகவல் அறிந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டி மருத்துவமனை வளாகத்தில் கூடி வருகின்றனர்.
