தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வருகிறது. தமிழக வெற்றி கழகம் ஆட்சியை பிடித்த நிலையில் இரு அணிகளாக செயல்பட்டு வரும் அதிமுகவில் ஒரு பிரிவினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்த நிலையில் உடனடியாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்த மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு உடனடியாக தமிழக வெற்றி கழகத்தில் இணைவது ஆரோக்கியமான அரசியல் அல்ல. இது அவர்கள் விரும்பி எதிர்கொண்ட முடிவு என்று கூறப்பட்டாலும் பிரதிபலனை எதிர்பாராமல் நடந்ததாக எடுத்துக்கொள்ள இயலவில்லை.
ஏற்கனவே சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்ததால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர் கொள்ள உள்ளனர். அவர்களை தமிழக வெற்றிக் கழகத்தில் உடனடியாக ஏற்றுக் கொள்வதன் மூலம் இதனை தமிழக வெற்றிக்கழகம் ஆதரிப்பதாகவே கருத முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இதேபோன்று அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை கவிழ எந்த விதத்திலும் விடமாட்டோம் என்று கூறிய நிலையிலும் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு உடனடியாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது ஆரோக்கியமான அரசியல் அல்ல. இது தமிழக வெற்றி கழகத்தின் எதிர்கால அரசியலுக்கு நல்லது கிடையாது. மேலும் இதனை ஏற்க முடியாது என்றும் தமிழக வெற்றிக்கழகம் இதனை ஊக்கப்படுத்த கூடாது என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
