கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் தற்போதைய மகளிர் அணி துணைச்செயலாளராக உள்ள சத்யா பன்னீர்செல்வத்தின் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இது தற்போது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்யா பன்னீர்செல்வம், 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். எம்எல்ஏ பதவியில் இருந்த போது, அவரது வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கணவர் பன்னீர்செல்வம் நகர மன்றத் தலைவராக இருந்த காலகட்டத்தில் ஊழல் சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரியிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த வழக்கு தொடர்பாக மேலும் ஆதாரங்கள் தேவைப்படுவதால், தற்போது மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அதிமுக தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சத்யா பன்னீர்செல்வம் மீது நிலவுகின்ற குற்றச்சாட்டுகள் மேலும் முக்கியத்துவம் பெறும் சூழல் உருவாகியுள்ளது.
