தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அடுத்து வரும் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து பல்வேறு வியூகங்களை வகுத்து வெற்றிக்காக உழைத்து வருகிறது. அந்த வகையில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மெகா கூட்டணி அமையும் என்று கூறி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்தது. இதனை அந்த கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜான் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பரப்புரையின் போது மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்கப்படும் எனவும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். இதற்கு தற்போது ஜான்பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது குறித்த இபிஎஸ் பேச்சு தேவையற்றது.

தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் இதுபோல் பரப்புரை செய்வது தங்கள் அரசியல் பயணத்திற்கு ஆபத்து. உங்களுடைய பயணம் தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வேண்டுமே தவிர குறுகிய எண்ணத்தில் இருக்கக் கூடாது. இது ஆபத்தானது என்று கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே அதிமுக கட்சியில் ஏராளமானோர் விலகி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் எம்பி சத்திய பாமா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனால் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கூட்டணிக்குள்ளும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.