இந்தியாவின் ஐபிஎல் தொடருக்குப் போட்டியாகக் கருதப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026, வரும் மார்ச் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த முறை 8 அணிகளுடன் பிரம்மாண்டமாக நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தாலும், வெளிநாட்டு வீரர்கள் வரிசையாகத் தொடரிலிருந்து விலகி வருவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஹாரி ப்ரூக், குடாகேஷ் மோட்டி மற்றும் முஸாராபானி போன்ற முன்னணி வீரர்கள் ஒப்பந்தம் செய்த பிறகு, ஐபிஎல் வாய்ப்பு அல்லது தேசிய அணிப் போட்டிகளைக் காரணம் காட்டி பாதியிலேயே வெளியேறுவது பாகிஸ்தான் ரசிகர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. குறிப்பாக, முஸாராபானி இஸ்லாமாபாத் அணியைக் கைவிட்டு, ஐபிஎல்-லில் கேகேஆர் (KKR) அணிக்குச் செல்ல முடிவெடுத்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

​இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் அதிரடியான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய ஹாரி ப்ரூக்கிற்கு பிசிசிஐ 2 ஆண்டுகள் தடை விதித்ததைச் சுட்டிக்காட்டிய அக்தர், பிஎஸ்எல் தொடரிலிருந்து பாதியிலேயே ஓடும் வீரர்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் எனச் சீறியுள்ளார். “ஒப்பந்தம் செய்த பிறகு ஏமாற்றும் இத்தகைய ‘துரோகிகளுக்கு’க் கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே பிஎஸ்எல் தொடரின் கௌரவம் காக்கப்படும்” என அவர் பிசிபி-க்கு (PCB) கோரிக்கை விடுத்துள்ளார். ஐபிஎல் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே பிஎஸ்எல் தொடங்கினாலும், முக்கிய வீரர்கள் விலகுவது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குப் பெரும் தலைவலியைத் தந்துள்ளது.