பாகிஸ்தான் கிரிக்கெட் என்றாலே சர்ச்சைக்கும் பஞ்சமில்லை, நோ-பாலுக்கும் பஞ்சமில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. சமீபத்தில் வங்கதேச அணியிடம் படுதோல்வி அடைந்து அவமானத்தில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு, அந்நாட்டின் உள்நாட்டு டி20 போட்டியான ‘நேஷனல் டி20 கப்’ மேலும் ஒரு தலைவலியைத் தந்துள்ளது. லாகூர் ப்ளூஸ் மற்றும் கராச்சி ப்ளூஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், கராச்சி வீரர் அசாத் அக்தர் வீசிய ஒரு நோ-பால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்துள்ளது. பந்துவீசும் போது தனது காலை கிரீஸை விட்டு அரை மீட்டர் தூரத்திற்கு வெளியே வைத்து அவர் வீசிய விதம், அப்பட்டமான பிக்சிங் (Match Fixing) வேலையோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

​இந்தச் சம்பவத்தை பார்த்த ரசிகர்கள், கடந்த 2010-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் முகமது அமீர் வீசிய அந்தச் சர்ச்சைக்குரிய நோ-பாலுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கிழித்துத் தொங்கவிட்டு வருகின்றனர். அதே ஓவரில் அசாத் அக்தர் 21 ரன்களை வாரி வழங்கியது, லாகூர் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு செய்யப்பட்ட சதி எனப் புகார்கள் எழுந்துள்ளன. “இது நோ-பால் வருடம்” என ரசிகர்கள் கிண்டல் செய்து வரும் வேளையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நம்பகத்தன்மை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு வீரரின் இத்தகைய பொறுப்பற்ற செயல், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய அவமானத்தைத் தேடித் தந்துள்ளதாக நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.