இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற மாட்டார் என கூறப்படுகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் பும்ரா இடம் பெறவில்லை, ஆனால் இப்போது முழு 4 டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் கட்டமாக பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பார்டர்-கவாஸ்கர் டிராபியில், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டு வருவதால் இந்திய அணி முதல் இன்னிங்சில் அபார முன்னிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக காயத்தில் இருந்து குணமடைந்து நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் பேட்டிங்கிலும் மதிப்புமிக்க பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளார்.

இரண்டாவது நாள் முடிவில் ஜடேஜா 66 ரன்களுடன் கிரீஸில் இருந்தார். கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 144 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை கலக்கி வரும் இந்தியாவை ஒரு செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இரண்டாவது டெஸ்டில் இருந்து வெளியேற விரும்பிய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முழு தொடரையும் தவறவிட்டதாக தெரிகிறது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையின் பின்னணியில், பும்ரா விஷயத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயத்தில் இருந்து பூம்ரா முழுமையாக குணமடைய கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட வடிவத்தில் விளையாடுவதன் மூலம் அவரை அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது குணமடைந்து வரும் பும்ரா முழு வேகத்தில் பந்துவீசுவதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சில் கவனம் செலுத்துவதால் பும்ராவுக்கு டெஸ்ட் தொடரில் இருந்து முழு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் 17ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருப்பதாகவும் தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் மார்ச் 17ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா பங்கேற்பாரா? என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது முதுகுத்தண்டில் காயம் அடைந்த பும்ரா, செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் இடம்பிடித்தார்.இருப்பினும், காயம் மீண்டும் ஏற்பட்டதால், மேலும் இரண்டு மாதங்கள் ஓய்வு அவசியம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது. இருப்பினும், இந்த முறையும் காயம் அவரை அணியில் இருந்து வெளியேற்றியது. பின்னர் அவர் நியூசிலாந்து மற்றும் தற்போதைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் தவறவிட்டார். பும்ரா விலகிய நிலையில், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணியின் வேகப் படையை வழிநடத்தி வருகின்றனர். ஜெய்தேவ் உனத்கட் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் பெஞ்சில் உள்ளனர்.